திங்கள், 2 நவம்பர், 2009

சரித்திரத்தில் மற்றுமொரு சாணக்கியன்



குடும்பத் தலைவராய் இருந்த அப்பாவின் மறைவு அவரின் இரத்தமான எங்களுக்குத் தந்த அதே வலியை அவரருடன் பழகியவர்களும், அவரின் இரசிகர்களும் அனுபவித்ததைக் கண்டு நாமே வியந்து போனோம். எம்மைப் போலவே அவரை அறிந்த ஒவ்வொருவரும் அவரின் மறைவுக்காகக் கலங்கிப் போனார்கள். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்துவிட்டு தம்மையே ஆறுதல்படுத்த முடியாமல் அழுதவர்கள் பலர்.” இது ஒரு சாணக்கியனின் மறைவு பற்றி அவரின் மகளின் வலியும் ஆச்சர்யமும் கலந்த வார்த்தைகள்.

அவரைச் சாணக்கியன் என்று கூடச் சொல்ல முடியாது. இவர் சாணக்கியனை விடச் சிறந்தவர் என்பதே என் எண்ணம். பொதுவாக இராஜதந்திரிகளையே சாணக்கியன் என்று புகழுவர். அந்தச் சாணக்கியன், இராஜதந்திரி என்ற ஒரு முகத்தையே கொண்டவன். ஆனால் சாணக்கியன் என்ற பெயரில் படைப்புகள் பலவற்றைப் படைத்த சி.இராமச்சந்திரனோ ஓவியவர், எழுத்தாளர், சிற்பி, கவிஞர், பத்திரிகையாளர், கேலிச்சித்திர வரைஞர் எனப் பலமுகங்களைக் காட்டியது மட்டுமன்றி ஒவ்வொரு துறையிலும் உச்சத்திறமையை வெளிப்படுத்தித் தன்னை நிலை நிறுத்தியவர்.

இந்த மாபெரும் கலைஞர், அறிஞர் கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் தகதி, பூரணை தினத்தில் இவ்வுலகை விட்டு நீங்கி இறைபதமடைந்து விட்டார். புத்தர் பிறந்து, ஞானமடைந்து, முக்தியடைந்த அதே பூரணை நாளொன்றிலேயே இவரும் இறைபதமடைந்துள்ளார்.

பரிசு தொடரில் அப்பா தொடர்ந்து எழுதி வந்த பௌத்த மதச்சிறப்புக் கூறும் குண்டலகேசி கதையை நிறைவு செய்தது கொண்டு அம்மதத்தின் சிறப்பு நாளான பூரணையிலேயே உலகை விட்டுப் போய்விட்டார். பௌத்த மதம் போதித்த அன்புநெறியிலேயே வாழ்தவர். அவர் யாரிடமும் கோபப்படமாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். அன்பாகவும் நிதானமாகவுமே பேசுவார்.” என்கிறார் இராமச்சந்திரனின் இளையமகள்.

அவர் கூறுவது முற்றிலும் உண்மையென்பதை உணர்ந்த அவரின் மகள் குறிப்பிடும் குண்டலகேசி தொடரே தக்க சான்றாக இருக்கும். பொதுவாகச் சிறுவர் இலக்கியங்களைப் படைப்பதே டினமென்பர். அதற்கு குழந்தைகளுடன் நெருக்கம் வேண்டுமென்றும், அவர்கள் உள்ளத்தைப் புரிந்து அவர்கள் இரசனைக்கேற்ப படைக்க வேண்டுமென்றும் கூறுவர். இதையெல்லாம் தாண்டி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியையே சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் படைப்பதானால் அவருக்கு சிறுவர்களுடன் எத்தகைய நெருக்கம் இருந்திருக்கும், அவர் உள்ளம் எவ்வாறு மென்மையாக குழந்தை உள்ளமாக இருந்திருக்குமென்பதை உறுதிப்படுத்த வேறு சாட்சி தேவையில்லை.

இவர் மறைந்ததற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த பரிசு இதழில் குண்டலகேசி தொடர் நிறைவடைந்திருந்தது. அவர் அந்தத் தொடரைப் பூர்த்தி செய்து விட்டே உயிரிழந்திருந்தார்.

அதிகளவில் அவருக்கு புகழைத் தேடித் தந்தது அவரின் ஓவியங்களும், கேலிச்சித்திரங்களுமே. “அப்பா பொதுவாகத் தன்னை விளம்பரப்படுத்த விரும்பாது விலகியிருந்த போதும் சில விருதுகள் அவரைத் தேடி வந்தன. மத்திய மாகாண சாகித்திய விழாவில் இரு முறை சிறந்த ஓவியருக்கான விருதுஇலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த கேலிச்சித்திரக் கலைஞருக்கான விருது… ‘ஓவியர் திலகம்எனும் பட்டம் இப்படி ஒரு சில விருதுகளே கிடைத்துள்ளன.” என அவரின் மற்றொரு மகள் கூறுகிறார்.

நல்லவேளை அவர் விலகியிருந்தார் என்றே என் மனதில் பட்டது. இல்லையென்றால் ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் தொடர்பான அத்தனை விருதுகளையும் தானே தட்டிக் கொண்டு போயிருப்பார். அவரின் அத்தனை ஓவியங்களும் கலைநயம் மிக்கவை.

அரசாங்கப் பாடசாலைகளில் பயிற்றப்படும் புத்தததகங்களில் பெரும்பாலானவற்றிலுள்ள ஓவியங்களை சந்திரா எனும் இராமச்சந்திரனே வரைந்துள்ளார். அப்புத்தகங்களின் அட்டைப்படங்களில் கூட இவரின் கைவண்ணமே தெரியும்.

சுந்திராவின் ஓவியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் குடும்பத்துடன் கொண்டிருந்த ஈடுபாடு தெரிய வந்தது. “அப்பாவின் ஓவியப் பெண்களில் எல்லாம் அம்மாவின் சாயல் தெரியுமென்று அப்பாவின் இரசிகரொருவர் அடிக்கடி சொல்லுவார்.” என்ற இளைய மகளை இடைமறித்த இரண்டாவது மகள் அப்பாவிற்கு குடும்பத்தில் அதீத ஈடுபாடு. குடும்பமும் கலையும் மட்டுமே அவரின் உலகம்என்றார். பொன்னையும் புகழையும் விரும்பும் உலகில் இப்படியும் ஒருவர்.

இவர் தினக்குரல் பத்திரிகையில் வரையும் அரசியல் கேலிச்சித்திரங்கள் பல தரப்பினராலும் பாராட்டிப் பேசப்பட்டவை. ஆனால் இறுதிக் காலத்தில் அவரின் திறமை சரிவரப் பயன்படுத்தப்படவில்லையென்றே கூறப்பட வேண்டும். வித்தியாசமான கற்பனை வளத்துடன் பொருள் பொதிந்த கேலிச்சித்திரங்களைக் குறிப்பாக அரசியல் கேலிச்சித்திரங்களை சாணக்கியன், ரிஷி, சந்திரா போன்ற பெயர்களில் வரைந்த இவர் சில அச்சுறுத்தல்களால் அவற்றைச் சற்றுத் தவிர்த்து சிறுவர் ஓவியங்களையே அதிகம் வரைந்தார். “விமானம் ஓட்டத் தெரிந்த என்னை சைக்கிளோட்ட வைச்சாச்சுஎன்று அடிக்கடி சொல்லுவாரென அவரின் மகளொருவர் கவலையுடன் தெரிவிக்கிறார்.

இதே நேரம் அப்பாவின் கேலிச்சித்திரங்கள் பலரைச் சிரிக்க வைத்துள்ளது. சிலரைக் கோபப்படவும் வைத்துள்ளது. ஆனால் கோபப்பட்டவர்கள் கூட முதலில் அதைப் பார்த்து வியந்து சிரித்த பின்னரே கோபப்பட்டதாகக் கூறியிருக்கிறார்களெனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஓவியங்களைப் போலவே சிற்பங்களையும் படைத்துள்ளார். புசல்லாவை அயர் டிவிசன், கந்தப்பளை, லபுக்கலை, தலவாக்கலையிலுள்ள மட்டுகலை ஆகிய நான்கு இடங்களிலுள்ள முத்துமாரியம்மன் கோயில்களுக்கான சிற்பங்களை இவரே உருவாக்கியுள்ளார். இதைத் தவிர கடைகளுக்கும் சிற்பங்கள் செய்து விற்றுள்ளார். சிறு வயதிலேயே மரங்கள் எடுத்து மரப்பாச்சி பொம்மைகள் செய்து சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பாராம். இத்தனைக்கும் அவர் சிற்பிகள் பரம்பரையைச் சேர்ந்தவரோ அல்லது அதனுடன் தொடர்பான குடும்பப் பின்னணியையோ கொண்டவரல்ல.

அப்பாவின் அம்மா, அப்பா இருவருமே தோட்டத் தொழிலாளிகள். அவருக்கு 3 சகோதரிகள் மட்டுமே. படித்து முடித்த பிறகு அவரின் சொந்த இடத்தில் சாதாரண கடையொன்றிலேயே வேலை செய்தார். அந்தக் காலங்களில் பத்திரிகைக்கு கதை எழுதுவார். அதற்கான ஓவியங்களையும் இணைத்து அனுப்புவார். அந்தத் திறமையே வீரகேசரி பத்திரிகையில் அவர் பத்திரிகையாளராக இணையக் காரணமானது.” என்கிறார் அவரின் மகள்களிலொருவர்.

அதன் பின்னர் சுடரொளி, தினக்குரல் ஆகிய தேசியப்பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளதுடன் பாரதி, சித்ரா போன்ற பத்திரிகைகளை ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். அத்துடன் தனது கடைசிக் காலத்தில் ஞாயிறு தினக்குரலின் பரிசு இணைப்பின் ஆசியராகவும் மலையகப் பகுதியின் மலையகப்பகுதியின் பொறுப்பாசிரியராகவும் பணி புரிந்தார்.

கலையும் வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். அந்த வகையில் சுயம்பு போன்ற இவரையும் வறுமை விட்டு வைக்கவில்லை. தனது சொற்ப சம்பளத்திலும் மனைவி தோட்ட வேலை செய்து ஈட்டும் வருமானத்திலேயே குடும்பச் சக்கரம் ஓடியது. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பார்கள். இவருக்கோ அந்த எண்ணிக்கையில் ஒன்றுதான் குறைவு, 4 பெண் பிள்ளைகள். ஆனால் வறுமையில் இருந்த அவர்களைப் நன்கு கற்பித்து நல்ல நிலையில் வளர்த்தெடுத்ததன் மூலம் சிறந்த குடும்பத்தலைவராகவும் நிமிர்ந்து நிற்கின்றார்.

அவரைப் போல திறமையான ஒருவர் மறைந்தது கலை உலகிற்கு பேரிழப்பே. இவரின் திறமைகளின் சொச்சங்கள் அவரின் வாரிசுகளிடம் இருந்தாலும் இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற போது, அவரைச் சந்தித்த பிரபலம் ஒருவர்ங்கப்பாவை இதுவரை சந்திக்காமல் இருந்தது எவ்வளவு துரதிஷ்டமாகி விட்டது.” என்று கலங்கினாரென அவரின் மகள் கூறுகிறார். கலை, மொழி பேதம் கடந்ததென்ற வகையில் அவர் மட்டுமல்ல, அவரை இழந்து போயுள்ள ஒவ்வொரு மனிதனும் துரதிஷ்டசாலியே! இவரின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பே!

ஆனாலும் அவர் நமக்காக, இந்த உலகிற்காக விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள் அவரின் படைப்புகள். அவை நூலுருப் பெற வேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறும் முன்னரே உலகை விட்டுச் சென்று விட்டார். எத்தனையோ நூல்களை தொகுக்குமளவு படைப்புகளை எமக்குத் தந்துவிட்டு! அவரின் ஆசை நிறைவேறி, அவை நூலுருப் பெற்று பயன் பெறுவதுடன் அவர் மறைந்தாலும் அவரின் நூல்கள் நிலைத்து வாழ வேண்டும்.




சாணக்கியன் வரைந்த சில கேலிச்சித்திரங்கள்...




















1 கருத்து:

jscjohny சொன்னது…

http://johny-johnsimon.blogspot.in/2015/10/vazhnthathu-pothumaa-comics-series-from.html
அன்புள்ள உங்களுக்கு என் நன்றிகளும், இந்தக் கதையும் அய்யா சார்பில்...